Friday 18 April 2014

திரையரங்குகள் தினம் ( ஏப்ரல் 18)




உலகப் பொதுமறையெனத் திருக்குறளைச் சொன்னால், உலகப் பொது அரங்கங்கள் எனத் திரையரங்குகளைச் சொல்லலாம். திருக்குறள் ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைவருக்கும் பொருத்தமான நல்ல விஷயங்களைச் சொன்னது. அதேபோல், எந்த ஜாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் என்று எந்த ஏற்றத்தாழ்வும் பாராட்டாமல் அனைவரும் வந்து சேர்ந்து, திரைப்படங்களைக் கொண்டாடும் இடம் திரையரங்குகளே. யோசித்துப் பாருங்கள். திரையரங்கங்களில் அனைத்துத் தரப்பு மக்களுடன் சேர்ந்து, படம் பார்க்கும் அனுபவத்திற்கு ஈடு இணையே இல்லை. அதனால்தான், மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திரையரங்குகள் மாறிவிட்டன.
இன்று ஏப்ரல்,18. சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்டின் பிறந்த நாள். இது ‘திரையரங்குகள் தின’மாக 80-20 மூவீஸ் கார்ப் என்ற அமைப்பால் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது.
இயக்குனர் ரா. பார்த்திபன், 1999-ல், ஹவுஸ் ஃபுல் என்ற தேசிய விருது பெற்ற படத்தில், திரையரங்குகளின் உன்னதத்தை அருமையாகச் சொல்லியிருப்பார். தென்னிந்தியாவின் முதல் திரையரங்கை தமிழகத்தில் நிறுவி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.
ரயில்வே ஊழியரின் தொடர் பயணம்
லூமியர் சகோதரர்கள், பாரிஸில் முதன் முறையாக ஒரு திரைப்படத்தைக் காண்பித்த 10 வருடங்கள் கழித்து, 21 வயதே ஆன சாமிக்கண்ணு வின்சென்ட், கோயம்புத்தூரில் ஒரு சினிமா இயக்கத்தைத் தொடங்கினார். தென்னிந்திய ரயில்வேயில் மாதம் ரூபாய் 25 சம்பளம் வாங்கிக்கொண்டு, திருச்சியில் குமாஸ்தாவாக வேலை செய்துவந்த அவர், மவுன சினிமாவின் சுவையை, இந்தியா வந்திருந்த டு பான்ட் என்ற பிரெஞ்சு விநியோகஸ்தர் மூலம் அறிந்து கொண்டார். பிப்ரவரி 1905-ல், அந்த பிரெஞ்சுக்காரர் உடல்நிலை சரியில்லாமல் தாயகம் திரும்ப முடிவு செய்தபோது, அவருக்கு நண்பராக இருந்த வின்சென்ட், மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில், ரூபாய் 2250-ஐ ஏற்பாடு செய்து, டு பான்டிடம் இருந்த டூரிங் சினிமா புரொஜக்டரையும், திரையையும், மவுனப் படங்களையும், மீதம் உள்ள கருவிகளையும் வாங்கினார். இவற்றைக் கொண்டு சினிமாவைத் தென்னிந்தியாவுக்கு 1905-ல் அறிமுகம் செய்தார்.
18 ஏப்ரல் 1883-ல் கோயம்புத்தூரில் பிறந்த வின்சென்ட் அதன் பிறகு திரைப்படங்களுடன் பயணிக்கத் தொடங்கினார். முன்னோடியான ‘லைஃப் ஆஃப் ஜீஸஸ்’ என்ற மவுனப் படத்துடன் தொடங்கிய இந்தப் பயணம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. சினிமா மீது இருந்த மோகத்தால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த டூரிங் சினிமாவை அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் (மலேசியா, லாகூர், பெஷாவர், மியான்மர் / பர்மா, ஆப்கானிஸ்தான்) கொண்டுசென்றார். கோயம்புத்தூருக்கு அருகில் டென்ட் போட்டுத் திரைப்படங்களைக் காண்பிக்க ஆரம்பித்துப் பெருவாரியான மக்களைக் கவர்ந்தார். அவரின் இந்த முயற்சியால், ‘டென்ட் சினிமா’ மிகவும் பிரபலமானது. பிறகு 1905-ல் வின்சென்ட் முதல் டென்ட் சினிமாவை சென்னையில், எஸ்பிலனேட் என்ற பகுதியில், ‘எடிசன் கிராண்ட் சினிமா மெகாபோன்’ என்ற பெயரில் தொடங்கி மக்களுக்கொரு பொழுதுபோக்கு அரங்கை உருவாக்கினார்.
கொடுத்து வைத்த கோவை நகரம்
ஆசியா முழுவதும் பயணம் செய்தபின், முதல் நிரந்தரத் திரையரங்கை கோயம்புத்தூரில் 1914-ல், வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயரில் (தற்போது டிலைட் என்ற பெயரில் இயங்கி வருகிறது) நிறுவினார். அதுவே, தென்னிந்தியாவில் முதல் நிரந்தரத் திரையரங்கமாக உருவானது. திரையரங்கில் உள்ள மாய சக்தியைத் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மக்களே முதலில் அனுபவித்தனர்.
ஒரு திரையரங்கில் ஆரம்பித்து, 12 திரையரங்குகளை
வின்சென்ட் கோயம்புத்தூரில் நிறுவினார். அத்துடன், ‘வள்ளித் திருமணம்’ என்ற படத்தை 1933-ல் தயாரித்து வெளியிட்டுப் பெரும் வெற்றிகண்ட வின்சென்ட், மேலும் சில படங்களை சென்ட்ரல் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்தார். இந்த வருடம் நூற்றாண்டு (1914-2014) காணும் முதல் தென்னிந்தியத் திரையரங்கைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. அத்துடன், தென்னிந்தியாவுக்கு சினிமாவை அறிமுகம் செய்த சாமிக்கண்ணு வின்சென்ட்டை தென்னிந்தியா சினிமாவின் தந்தையாக அங்கீகரித்து அவரின் பிறந்த தினமான இன்றைய நாளை சினிமாவை நேசிக்கும் அனைவரும் கொண்டாட வேண்டும்.
ஏன் இந்த நிலை?
வின்சென்ட்டால் துவக்கப்பட்ட இந்த நிரந்தரத் திரையரங்குகள் புரட்சி தமிழகம் முழுவதும் பரவி, ஒரு காலகட்டத்தில் 2,000 திரை அரங்குகளுக்கு மேல் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவுக்கு வசந்த காலத்தை ஏற்படுத்தியது. தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கு பின், 1990-முதல் திரையரங்கு களின் வசந்த காலம் மாறிப் பல சோதனைகளைச் சந்தித்துவருகிறது. பொழுதுபோக்கிற்குத் திரையரங்குகள் மட்டுமே என்றிருந்த நிலைமை, தொலைக்காட்சி வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, 2000 ஆண்டுக்குப் பின் அதன்
ஆதிக்கம் பெரிதாகி இன்று தொலைக்காட்சிக்குப் பின் திரையரங்குகள் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனுடன், கேபிள் டிவி சேனல்கள், டிவிடிகள் (திருட்டு டிவிடிகளும் சேர்ந்து), இணையதள இலவச வீடியோக்கள், என்று பல விதமாகப் புதுத் திரைப்படங்களை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்திற்கு மட்டுமே திரையரங்குகளுக்கு வரும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்த பின், பல திரையரங்குகள், இன்று வணிக வளாகங்களாக மாறி வருவது (சென்னையில் மட்டும் சன், அலங்கார், வெலிங்டன், ஆனந்த், சபையர், உமா என பல பிரபல அரங்குகள்) தமிழ் சினிமாவுக்குச் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதனுடன், கேபிள் டிவி சேனல்கள், டிவிடிகள் (திருட்டு டிவிடிகளும் சேர்ந்து), இணையதள இலவச வீடியோக்கள், என்று பல விதமாகப் புதுத் திரைப்படங்களை மக்கள் வீட்டில் இருந்தே பார்க்கிறார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்திற்கு மட்டுமே திரையரங்குகளுக்கு வரும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்த பின், பல திரையரங்குகள், இன்று வணிக வளாகங்களாக மாறி வருவது (சென்னையில் மட்டும் சன், அலங்கார், வெலிங்டன், ஆனந்த், சபையர், உமா என பல பிரபல அரங்குகள்) தமிழ் சினிமாவுக்குச் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் கடந்த 5 வருடங்களில், மல்டிபிளக்ஸ் எனப்படும் பல திரையரங்குகள் உள்ளடக்கிய, எல்லா வசதிகளும் கொண்ட பொழுதுபோக்கு வளாகங்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் உருவாகிவருவது, நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திவருகிறது. 1,000 இருக்கைகள் கொண்ட திரை அரங்குகள் இனிமேல் எடுபடாது. எனவே மினிபிளக்ஸ் என்ற அமைப்பின் மூலம், 400 முதல் 500 இருக்கைகள் மட்டும் கொண்ட இரண்டு அல்லது மூன்று அரங்கங்கள் கொண்ட வளாகங்களை எல்லாச் சிறு நகரங்களிலும் ஏற்படுத்துவது, திரையரங்கு வியாபாரத்தை லாபகரமாக நடத்த உதவும்.
தேவை திரையரங்குகள்
ஏழு கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில், 1,000-க்கும் குறைவாகவே திரையரங்கங்கள் இருப்பது நல்ல சூழ்நிலை அல்ல. அமெரிக்காவில், பத்து லட்சம் மக்களுக்கு, 117 திரையரங்கங்கள் என்ற அளவில் உள்ளன. தமிழகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு 13 திரையரங்குகள். அமெரிக்காவின் அளவுகோலின்படி பார்த்தால் தமிழகத்தில், 8,000-க்கும் மேல் திரையரங்கங்கள் இருக்க வேண்டும். 2020-ல் குறைந்தது, 2,000 திரையரங்கங்களாவது தமிழகம் காண, அரசாங்கமும், திரையுலகமும் முயற்சி செய்தால், தமிழ்த் திரையுலகம் பெரிய வளர்ச்சியைக் காணலாம்.
மல்டிபிளக்ஸ் புரட்சி மூலம், இந்தி சினிமா இன்று பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல், தமிழ் சினிமாவில் பல புது முயற்சிகளுக்கு வழி வகுக்க, அனைத்து நகரங்களிலும் மல்டிபிளக்ஸ் / மினிபிளக்ஸ் என்ற புரட்சி ஏற்பட்டு, தமிழகம் 2,000 திரையரங்கங்களை 2020-ல் காண வேண்டும் என்ற உறுதிப்பாட்டினை சாமிக்கண்ணு வின்சென்ட்டை நினைவுகூரும் இந்த நாளில் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்

No comments:

Post a Comment