Saturday 5 April 2014

இந்திய அரசியலமைப்பு பற்றிய செய்திகள்


இந்தியா  இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற  (Secular), மக்களாட்சிக் (Democratic)  குடியரசு (Republic).
 இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
 ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.
 அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
 உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசமைப்பான இந்திய அரசமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.
 முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.
 மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு வரலாறு
 இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
 இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.
நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.
 நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
 ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.
 முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
 அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
 அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
 அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.
 அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா.
 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
 அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
 அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.
 அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
 அரசமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
 அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
 அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.
 அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
 அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
 அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
 இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.
 அரசமைப்புச் சட்ட கையெழுத்துப் பிரதிகள் புகைப்படமாக்கப்பட்டு டேராடூனில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு மலர்ந்தபோது அரசியல் அமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது, அதன் தலைவர் இந்திய குடியரசுத்தலைவரானர் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.
முகவுரை
 முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும்  நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
 அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
 இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.
 இந்திய அரசமைப்பின் முகவுரை அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.
 முகவுரை 1976-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை திருத்தப்பட்டது. 42 வது அரசமைப்புதிருத்தத்தின் படி சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஐக்கிய போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.
முகவுரையின் வாசகங்கள்
 இந்திய அரசமைப்பிலுள்ள முகவுரை கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டுள்ளது.
 இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (soverign), சமதர்ம(socialist), சமயச்சார்பற்ற (secular), மக்களாட்சிக் குடியரசாக (Demacratic Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம்.
 இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய பொருளாதார அரசியல் நீதியும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை, மதப்பற்று, மதவழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும், தகுதி மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் கிடைக்கவும் மக்களிடையே தனிமனித மாண்பையும் நாட்டின் ஒற்றுமையையும் வளர்க்கவும் நமது அரசியல் நிர்ணய சபையில் உறுதி கொண்டு 1949 நவம்பர் 26ம் நாளான இன்று நமக்கு நாமே இந்த அரசியலமைப்பை நிறைவேற்றி அளித்து நடைமுறைப்படுத்துகிறோம்.
 முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதியா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. பெருபாரி (எதிர்) இந்திய ஒன்றியம் (1960) வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல எனத் தீர்ப்பளித்தது. ஆனால் கேசவ பாரதி (எதிர்) இந்திய அரசு (1973) வழக்கில் முகவுரை அரசமைப்பின் ஒரு பகுதி எனத் தீர்ப்பளித்துள்ளது.
பகுதிகள் மற்றும் உறுப்புகள்  ( Parts & Articles)
 பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).
 பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).
 பகுதி III - அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 - 35).
 பகுதி IV - அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 - 51).
 பகுதி IV – A - அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
 பகுதி V - குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
 பகுதி VI - ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
 பகுதி VII - முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள்  தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.
 பகுதி VIII - யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 - 242).
 பகுதி IX - பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 - 243O).
 பகுதி IX A - நகராட்சிகள் (உறுப்பு 243P - 243ZG)
 பகுதி X  பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).
 பகுதி XI   மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
 பகுதி XII   நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264  300A).
 பகுதி XIII  இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).
 பகுதி XIV   மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).
 பகுதி XV  தேர்தல் (உறுப்பு 324-329).
 பகுதி XVI  ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330  342).
 பகுதி XVII  ஆட்சிமொழிகள் (உறுப்பு 343  351).
 பகுதி XVIII   அவசரநிலைப் பிரகடனம் (உறுப்பு 352  360).
 பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361  367).
 பகுதி XX அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
 பகுதி XXI  தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
 பகுதி XXII  அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393  395).
 அரசமைப்பு முகவுரை  இந்திய அரசியல் அமைப்பின் நோக்கம், நம்பிக்கை
 அடிப்படை உரிமைகள்  அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது
 அரசு நெறிமுறைக் கோட்பாடு  நல அரசை (Welfare State) உருவாக்குவது.
 அடிப்படை கடமைகள்  குடிமக்களின் பொறுப்புணர்ச்சியை மேம்படுத்துவது.
 அட்டவணைகள்
 அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
 முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
 எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
 எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
 எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
 எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள்  சேர்க்கப்பட்டன.
 ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
 ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
 அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
 முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
 இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
 மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
 நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
 ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
 ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
 ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
 எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
 ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
 உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
 உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
 உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
 உறுப்பு 14: சமத்துவ உரிமை.
 உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
 உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
 உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
 உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
 உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
 உறுப்பு 25: சமய உரிமை.
 உறுப்பு 36  51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
 உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை   (Constitutional Remedies)
 உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
 உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
 உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
 உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
 உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
 உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
 உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
 உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
 உறுப்பு 110: பண மசோதா (Money Bill )
 உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
 உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
 உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
 உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
 உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
 உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
 உறுப்பு 280: நிதி ஆணையம்
 உறுப்பு 300A: சொத்துரிமை
 உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
 உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
 உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
 உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
 உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments to the constitution)
 உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்
அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
 அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
 திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல்
முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்
 முதல் திருத்தம் (1951)-  ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.
 ஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)
 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.
 14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.
 21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
 24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
 26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
 42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது.  அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.
 44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.
 52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
 58-வது திருத்தம் (1987)  - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
 61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
 69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
 71-வது திருத்தம் (1992)  - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.
 74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
 76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
 82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.
 84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.
 860வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
 பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
 87-வது திருத்தம் (2003)  மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.
 91-வது திருத்தம் (2003)  மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
 92-வது திருத்தம் (2003)  போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
 93-வது திருத்தம் (2005)  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
 94-வது திருத்தம் (2006)  மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
 96-வது திருத்தம் (2011)  இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.
 97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX  B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
 98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.
 8, 23, 45, 65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.
அடிப்படை உரிமைகள்
 அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள். அடிப்படை உரிமைகள் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
 அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம்.
 உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள்
1. சமத்துவ உரிமை
(உறுப்புகள் 14 முதல் 18 வரை)
2. சுதந்திர உரிமை
(உறுப்புகள் 19 முதல் 22 வரை)
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
(உறுப்புகள் 23 மற்றும் 24)
4. சமய சுதந்திர உரிமை
(உறுப்புகள் 25 முதல் 28 வரை)
5. கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள்
(உறுப்புகள் 29 முதல் 30 வரை)
6. அரசமைப்பு சார் தீர்வுகள் உரிமை
(உறுப்பு 32)
முன்பு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை (உறுப்பு 31) 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 44வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண அரசமைப்பு உரிமையாக உறுப்பு 300ஏ-யில் வைக்கப்பட்டது.
நீதிப் பேராணைகள் (Writs)
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 32வது உறுப்பின்படி, இந்தியர்களுக்கு உள்ள நீதி பேராணைகள் பின் வருமாறு:-
 ஆட்கொணர் நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)
 செயலுறுத்தும் நீதிப் பேராணை (Writ of Mandamus)
 நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (Writ of Certiorari)
 தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto)
 தடைசெய்யும் நீதிப் பேராணை (Writ of Prohibition)

அடிப்படைக் கடமைகள்
1976-ல் செய்யப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் பத்து அடிப்படைக் கடமைகளை அரசமைப்பில் இணைத்தது. அடிப்படைக்கடமைகள் 51 எனும் உறுப்பாக அரசியலமைப்பின் IVA பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
1) இந்திய அரசமைப்பிற்குக் கீழ்ப்படிவதுடன் அரசமைப்பு நிறுவனங்கள், லட்சியம், தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
2) விடுதலைப் போராட்டத்தின் போது புத்துணர்வளித்த உன்னதமான இலட்சியங்களை நினைவிற்கொண்டு பின்பற்ற வேண்டும்.
3) இந்தியாவின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
4) அழைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுத் தேசியச் சேவை செய்ய வேண்டும்.
5) சமய, மொழி, பிராந்திய வேறுபாடுகளைகக் கடந்து இந்திய மக்கள் அனைவரிடமும் சகோரத்துவமும் இணைக்கமும் ஏற்படப் பாடுபடுவதுடன் பெண்களை இழிவு செய்யும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
6) நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
7) காடுகள், ஏரிகள், ஆறுகள், விலங்கினங்கள் ஆகியவை உள்ளிட்ட புறச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன் உயிரினங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.
8) அறிவியல் உணர்வு, மனிதநேயம், புலனறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும்.
9) வன்முறையை வெறுத்து ஒதுக்கிப் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்.
10) தனிப்பட்ட அளவிலும் கூட்டுச் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலமாக நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.
11) 6  முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குவது
2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 86-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி 11-வது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்டது.
இந்தியக் குடியுரிமை
இந்திய குடியுரிமையை ஐந்து முறைகளின் பெறலாம்.
 பிறப்பு (By Birth)
 மரபு வழி (By Descent)
 பதிவு (By Registration)
 இயல்பூட்டுதல் (By Naturalisation)
 பிரதேசங்களின் ஒன்றிணைப்பு (By incorporation of Territories)
குடியுரிமையை இழக்கும் மூன்று முறைகள்
 துறத்தல் (Renunciation)
 முடிவுக்கு வருதல் (Termination)
 நீக்குதல் (Deprivation)
அரசு நெறிமுறை கோட்பாடுகள்
அரசு சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் கொள்கைகள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு சட்டங்களை இயற்றும்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் நான்காவது பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோட்பாடுகளை கருத்திற்கொண்டு சட்டமியற்ற வேண்டும்.
இவை நீதிமன்றங்களின் வாயிலாகக் கட்டாயப்படுத்தப்பட முடியாதவை. அதாவது இவற்றில் எந்தக் கொள்கையையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக எவரும் அரசின் மீது வழக்குத் தொடர முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிகளின்படி செம்மையாக செயலாற்றவில்லை எனில் அடுத்தது வரும் தேர்தலில் மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தக்க தீர்ப்பு அளிப்பார்கள் என்று டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான நெறிகள்
சமுதாய,  பொருளாதார, அரசியல் நீதி அனைவருக்கும் கிடைத்து மக்கள் நலம் எற்படும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும் (உறுப்பு 38)
எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்கள் கிடைக்கவும், பொருளாதார வனங்களின் உரிமை பரவலாக்கப்படவும், செல்வம் ஒரு சிலரிடமே குவிதல் தவிர்க்கப்படவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பிற்குச் சம ஊதியம் கிடைக்கவும், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது உடல்நலனைப் பாதிக்கும் வண்ணம் அவர்களிடம் வேலை வாங்குவது தவிர்க்கப்படவும் அவசியமான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் (உறுப்பு 39)
வேலை பார்க்கும் உரிமை, கல்வியுரிமை, வேலை வாய்ப்பற்றோர்க்கும், வயது முதிர்ந்தோர்க்கும் இயலாதவர்கட்கும் உதவுதல் போன்றவற்றை அரசு செய்ய வெண்டும் (உறுப்பு 41)
காந்தியக் கொள்கைகள் தொடர்பான நெறிகள்
ஊராட்சி மன்றங்கள் வலுவாக்கப்பட்டு அவை சிறப்பான சுய ஆட்சி அமைப்புகளாக ஆக அரசு முயல வேண்டும் (உறுப்பு 40)
மக்களின் உணவு சத்துள்ளதாக அமைந்து அவர்கள் உடல்நலம் பெற முயற்சிக்க வேண்டும். போதை தரும் பானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துதல் தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 47)
கால்நடை பராமரிப்பு நவீன அறிவியல் முறைப்படி அமைய கவனம் செலுத்தப்பட வேண்டும். பசு மற்றும் கன்றுகளைக் கொல்லுவது தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 48)
தொழிலாளர்கள் தொடர்பான நெறிகள்
தொழிலாளர்கள் பணிபுரியுமிடத்தில் நியாயமான மனிதாபிமானச் சூழல் நிலவவும், பெண்களுக்கு மகப்பேறு நிவாரணம் கிடைக்கவும் வகை செய்ய வேண்டும் (உறுப்பு 42)
விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விதமான தொழிலாளர்கட்கும் ஒரளவு நல்ல வாழ்க்கைத்தரம் அமையும் விதத்தில் ஊதியம் பெறவும் பணி இடத்தில் நல்ல சூழல் அமையவும் ஒய்வு வசதிகள் கிடைக்கவும் முயற்சிப்பதுடன் கிராமப்புறங்களில் குடிசைத்தொழில்கள் மேம்படவும் முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 43)
இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விதமான சீரியல் சட்டத்தொகுப்பு அமைய முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 44)
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர், குறிப்பாக அட்டவணைச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமுதாய அநீதி மற்றும் சுரண்டலிருந்து காக்கப்படவும் மேம்பாடயைவும் ஆவண செய்ய வேண்டும் (உறுப்பு 46)
வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களையும் இடங்களையும் பாதுகாக்க வேண்டும் (உறுப்பு 49)
நீதித்துறையை நிர்வாகத்துறையிடமிருந்து பிரிக்க முயல வேண்டும் (உறுப்பு 50)
பன்னாட்டு அமைதி காக்கவும் நாடுகளிடையே இணக்கத்தை வளர்க்கவும் பன்னாட்டுச் பிரச்னைகளை அமைதி வழிகளில் தீர்க்கவும் அரசு முயல வேண்டும் (உறுப்பு 51)
சில வழிகாட்டி நெறிகளை 42வது அரசியலமைப்புத் திருத்தம் இணைத்தது. அவையாவனை:
குழந்தைகள், இளைஞர்கள் நன்கு வளர வாய்ப்புகள் வழங்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் சுரண்டலிலிருந்து காக்கப்படவேண்டு (உறுப்பு 39)
சட்டமுறை நீதியைக் காக்கும் வண்ணம் அமைய வேண்டும். பொருளாதார வசதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்க இலவசச் சட்ட உதவிக்கான முறையை உருவாக்க வேண்டும் (உறுப்பு 39)
தொழிற்சாலைகளை மேலாண்மை செய்வதில் தொழிலாளர்களும் பங்குபெற வகை செய்தல் வேண்டும் (உறுப்பு 43)
புறச்சூழலை மேம்படுத்தவும் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (உறுப்பு 48)
அரசியலமைப்பின் 44-வது திருத்தம் கீழ்க்கண்ட நெறியை இணைத்தது. தனி நபர்களிடையில் மட்டுமின்றி மக்கள் பிரிவினர்களிடையிலும் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு முயல வேண்டும் (உறுப்பு 38)
வழிகாட்டி நெறிகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல் நிர்ணயச் சபையில் வலியுறுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என்பதை (தேர்தலை கருத்தில்கொண்டு) மக்கள் கண்காணிப்பார்கள் என்றார்.
மத்திய அரசாங்கம்
 மத்திய சட்டமியற்றும் அமைப்பு:  லோக்சபா, ராஜ்யசபா.
 மத்திய நிர்வாக அமைப்பு:  குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
 மத்திய நீதி அமைப்பு:  உச்ச நீதிமன்றம்.
மாநில அரசாங்கம்
 மாநில சட்டமியற்றும் அமைப்பு:   சட்டசபை, சட்டமேலவை
 மாநில நிர்வாக அமைப்பு:  ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
 மாநில நீதி அமைப்பு:  உயர் நீதிமன்றம்.
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
 குடியரசுத் தலைவர் : 35
 ஆளுநர் : 35
 லோக்சபா உறுப்பினர் : 25
 ராஜ்யசபா உறுப்பினர் : 30
 சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
 பஞ்சாயத்து உறுப்பினர் : 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
 உயர் நீதிமன்ற நீதிபதி : 62
 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
 தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
 மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
 மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
குடியரசுத் தலைவர்
இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.
 குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
 குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.
 மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
 இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
 இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
 பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
பிரதமர்
பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவர்
லோக்சபாவில் பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியால் தேர்ந்தேடுக்கப்படுபவரை குடியரசுத்தலைவர் பிரதமராக நியமிக்கிறார்.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவையின் தலைவர் பிரதமர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குடியரசுத்தலைவரின் பெயரில் இவரே கவனிக்கிறார்.
நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளை அவ்வப்போது குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பது, அமைச்சர்களுக்க்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது, கேபினெட் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது, திட்டக்குழுவிற்கு தலைமை வகிப்பது ஆகியவை பிரதமரின் முக்கிய பணிகள்
மத்திய அமைச்சரவை
இந்திய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அமைச்சரவை, ஓர் கூட்டுப் பொறுப்புடைய அமைப்பு .
அமைச்சரவையின் தலைவர் பிரதமர், கேபினெட் அல்லது அமைச்சர் குழு என அழைக்கப்படும் அமைச்சரவைக்குள் அடங்கிய அமைப்பிற்கும் அவரே தலைவர்.
இந்திய அரசமைப்பின்படி  அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்.
பாராளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.
மக்களவை (லோக் சபா)
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின்  பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .
மாநிலங்களவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை  250
மறைமுக தேர்தல் மூலம்  238  உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
ராஜ்ய சபா உறுப்பினர்களின்  பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே 13 அன்று நடந்தது.
மாநில அரசாங்கம்
மாநில ஆளுநர்
பெயரளவிலான நிர்வாகத்துறைத் தலைவராகத் திகழ்பவர் மாநில ஆளுநர் (Governor).
குடியரசுத்தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கலாம்.
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் குடியரசுத்தலைவர் அவரை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம்.
1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 7-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி குடியரசுத்தலைவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இந்தியக்குடிமகனாகவும் 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அரசாங்கப் பணியில் இருப்பவராகவோ, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவோ, இருக்கக்கூடாது.
முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும்  நியமிக்கிறார். மாநிலத் தலைமை அரசு வழக்கறிஞரும் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்கள். மாநில அரசாங்கத்தின் எல்லா நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயரில் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் அவர் சட்டமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் துவக்கவுரை நிகழ்த்துகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எல்லா மசோதாக்களும் அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக்க முடியும்.
மாநிலச்சட்டமன்றத்தைக் கூட்டவும், கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
குற்றமன்னிப்பு, தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு.
மாநில முதலமைச்சர்
மாநில அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவராகவும், மாநில அமைச்சரவையின் தலைவராகவும்  திகழ்பவர் மாநில முதலமைச்சர் (Chief Minister).
முதலமைச்சரை ஆளுநர் நியமனம் செய்கிறார். முதலமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
முதலமைச்சராக நியமிக்கப்படுபவர், மாநிலச்சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நியமிக்கப்படும்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லையெனில், நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கான துறைகளையும் முதலமைச்சரே முடிவு செய்கிறார்.
மாநில சட்டமன்றம்
மாநில சட்டமன்றம் ஈரவை அல்லது ஓரவைக் கொண்டது. ஈரவை சட்டமன்றத்தில் சட்ட மன்றமும் (கீழவை), சட்ட மேலவையும் இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற கீழவையும், மறைமுக தேர்ந்தெடுப்பு மற்றும் நியமன உறுப்பினர்களை மேலவையும் கொண்டிருக்கும்.
மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்றிருப்பவரே முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இந்தியாவில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளன. பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா.
உச்ச நீதிமன்றம்
இந்தியாவிலேயே உச்ச பட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.
உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது..
உச்ச நீதிமன்றத்தின் ஆள்வரை,  தனி ஆள்வரை (அ) முதலேற்பு ஆள் வரை, மேல் முறையீட்டு ஆள்வரை, நீதிப் பேராணை ஆள்வரை ஆலோசனை ஆள்வரை என நான்கு வகைப்படும்.
மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகளை நீதிமன்றம் தனி ஆள்வரை கீழ் விசாரிக்கிறது.
இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, உறுப்பு 32-ன் கீழ் நீதிப் பேராணை கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
இந்திய குடியரசுத் தலைவர் கேட்கும்பட்சத்தில் உறுப்பு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றம் சட்ட சிக்கல்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது.
உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை பாதுகாப்பதால் இது அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் எனப்படுகிறது.
உயர் நீதிமன்றங்கள்
உயர் நீதிமன்றம், மாநில நீதித்துறையின் தலைமையாகும்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.
ஒரு மாநிலத்தின் நீதித் துறை உயர் நீதிமன்றத்தினையும் கீழ் நீதிமன்றங்களையும் உள்ளடக்கியதாகும்.
பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமோ, யூனியன் பிரதேசங்களுக்குமோ, சேர்த்து பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தினை அமைக்கலாம் (விதி 231).

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

* தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து -  352

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

* தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

* 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

* ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து -  356

*முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

* முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

* நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து-  360

* நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

* நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

* நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

* 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

* நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

* நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

* நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

* நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

* நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

* முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

* முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

* பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

* பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

* நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.


தேர்தல் ஆணையம்

* தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

* தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324

* தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

* தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

* தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)

* தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

* தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

* ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

* தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

* புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

* முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

* கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

* திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

* திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

* இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

* ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Very useful Information, Thank you very much sir/ madam.

    ReplyDelete
  3. very useful blog about constitution, especially in tamil, thank u so much sir/madam

    ReplyDelete
  4. வாழ்க நீங்கள்...வளர்க உங்கள் தொண்டு...

    ReplyDelete
  5. வாழ்க நீங்கள்...வளர்க உங்கள் தொண்டு...

    Reply

    ReplyDelete
  6. வாழ்க நீங்கள்...வளர்க உங்கள் தொண்டு...

    Reply

    ReplyDelete
  7. மகத்தான சேவை தொடர வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி*

    ReplyDelete
  8. ஒரு சிறந்த அரசியலமைப்பு விளக்கம் இந்த தகவல் அனைத்தும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது...

    நன்றி

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete